ஒரு மில்லியன் மீல்ஸ் நன்கொடை கொடுத்த பிரபல ஜோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி இருப்பதால் அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் அனைத்து நாடுகளின் அரசுகளும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் அன்றாடம் வருமானம் செய்து சாப்பிட்டு வருபவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களது குடும்பம் பட்டினியால் வாடி வருவதாகவும் இருப்பினும் உயிரை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் பசியுடன் முடங்கிக் கிடக்க வேண்டிய கட்டாய நிலையில் அவர்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரஸல் வில்சன் மற்றும் அவரது மனைவி கெய்ரா ஜோடி சேர்ந்து ஒரு மில்லியன் மீல்ஸ் நன்கொடையாக உணவு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் பயத்தில் வீட்டிற்குள் பசியால் வாடும் ஏழை, எளியோர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நட்சத்திர ஜோடி மட்டுமின்றி மேலும் பலர் உணவு வழங்கும் நிறுவனத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதால் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள் பசியுடன் முடங்கிக் கிடப்பவர்களுக்கு பேருதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இயற்கை பேரிடர் வரும்போது இதுபோன்ற உதவிகளை பிரபலங்கள் செய்து வருவதால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை புத்துயிர் பெறுகிறது. நம்மூர் பிரபலங்களும் வெறும் அட்வைஸ் கூறுவதோடு நிறுத்தாமல் இதேபோன்று தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாமே? என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.