'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரையிட்ட தியேட்டருக்கு அபராதம்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,May 21 2022]
வினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை திரையிட்ட தியேட்டருக்கு ரூபாய் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் மொத்த வசூல் 60 கோடிக்கும் மேல் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரத்தில் சில குளறுபடி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் பல திரையரங்குகளில் வசூல் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள திரையரங்கில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிக்கெட் விற்பனை குறைத்து காட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த தியேட்டருக்கு 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழகத்தின் பல திரையரங்குகளில் டிக்கெட் கணக்கை தவறாக சித்தரிப்பதாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ’வலிமை’ போன்ற படங்களுக்கும் இதே போன்று போலி வசூல் நிலவரங்கள் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் முறையில் டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.