விவசாய நிறுவனங்கள் கடன்பெறும் வகையில் ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கீடு!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
கொரோனா நேரத்தில் விவசாயத் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலான பல்வேறு திட்ட வடிவங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி விவசாயம் சார்ந்த (AIF) உள்கட்டமைப்பு நிதிக்கு என்று 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியில் இருந்து விவசாயம் சார்ந்த கருவிகளையும் மருந்து, விதைகள் போன்ற மற்ற உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கடன் பெறும் வகையிலான திட்டத்திற்குத் தற்போது தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ஒதுக்கப் பட்டிருந்த மொத்தத் தொகையில் 6 விழுக்காட்டினை அதாவது ரூ.5,990 கோடி ரூபாயைத் தற்போது தமிழக அரசு விவசாய வேலைகளை செய்யும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. முன்னதாக அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசின் வேளாண்மை ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறை (DAC&FW), இத்திட்டம் கொரோனா காலத்திற்கு என அறிவிக்கப் பட்டது. இது தற்காலிகமானது. மேலும் 10 வருட காலத்திற்கு இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. Atmanirbhar Bharat Abhiyan Economic என்ற தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்நிதியைத் தமிழக அரசு விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் கடன் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5,990 கோடி ரூபாயில் முதன்மை விவசாயக் கட்டமைப்பு, உழவர் உற்பத்தி அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்கள் மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் விவசாய உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 5,990 கோடியாக இருக்கிறது. மற்றபடி கேரளாவிற்கு ரூ. 2,520 கோடி, தெலுங்கானாவிற்கு ரூ. 3,075 கோடி, கர்நாடகாவிற்கு ரூ. 4,525 கோடி, ஆந்திராவிற்கு ரூ. 6,540 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.