பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி காட்டும் மாநிலம்!!!
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
கொரோனா சிகிச்சைக்கு இன்றுவரை முழுமையான சிகிச்சை மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை விஞ்ஞானிகளிடையே புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபட்ட நிலையில் அவர்களது பிளாஸ்மாக்களை தானமாக கொடுக்க இயலும். அப்படி ஒரு நபர் தனது பிளாஸ்மாவை தானம் செய்தால் அதைக் கொண்டு நான்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவரின் ரத்த செல்கள் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த ஆன்டிபாடிகளை புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு செலுத்தும்போது மிக எளிதாகத் தொற்றில் இருந்து விடுபட முடிகிறது என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மகராஷ்டிரா, தமிழகத்தை அடுத்து ஆந்திராவிலும் தற்போது நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிளாஸ்மாக்களை தானம் செய்தால் ரூ. 5000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறார். இதனால் அதிகளவு பிளாஸ்மாக்கள் தானமாக கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 60 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் 1,30,557 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. நோயிலிருந்து 60,024 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 1,281 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களிடையே கடும் பதற்றம் அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகக்து.