கோயில் அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை… தமிழக அரசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Monday,May 31 2021]
தமிழகக் கோயில்களில் மாதச்சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கொரோனா நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மாதச் சம்பளம் இல்லாமல் கோவில்களில் பணியாற்றி வரும் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் 36 ஆயிரம் திருக்கோயில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களின் வருமானம் வெறும் 10 ஆயிரத்தை தாண்டுவதில்லை. அதோடு 12,959 கோவில்களில் ஒருகால பூஜை அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று உரிமம் பெற்று வருமானம் குறைவாக உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரி, அர்ச்சகர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் கொரோனா காரணமாகக் கடந்த ஒரு வருடமாக அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் இத்தகைய கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், பிற ஊழியர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தத் திட்டத்தால் தமிழகத்தில் 14 ஆயிரத்திற்கும் கோவில் சேவகர்கள் பயனடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு 10 கிலோ அரிசி மற்றும் 15 சமையல் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இவையனைத்தும் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜுன் 3 ஆம் தேதி வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.