அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,September 13 2019]
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் சரக்கு லாரி ஒன்றுக்கு ரூபாய் 2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கினர். இதனையடுத்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிகபாரம் ஏற்றி வந்ததோடு லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களும் முறைப்படி டிரைவரிடம் இல்லை. இதனையடுத்து ரூபாய் 2 லட்சத்து 500 அபராத தொகையுடன் கூடிய செலான் டிரைவரிடம் கொடுக்கப்பட்டது.
இந்த தொகையை பார்த்ததும் லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இந்த அபராத தொகை குறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகை அதிகம் என்பதால் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு டெல்லி சாலை போக்குவரத்து துறையினர் லாரி உரிமையாளரை அறிவுறுத்தினார். மேலும் நீதிமன்றத்தில் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்தால் அபராதத் தொகை குறைக்கப்படலாம் என்றும் லாரி உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகம் என்றாலும் இன்னும் ஒருசில நாட்களில் சாலைகளில் ஓடும் 100% வாகன ஓட்டிகளிடமும் சரியான ஆவணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.