திரையரங்குகள் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதி: ரசிகர்கள் அதிருப்தி

  • IndiaGlitz, [Saturday,October 07 2017]

திரைத்துறையினர்கள் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் கேளிக்கை வரியும் கட்ட வேண்டிய நிலை இருப்பதை அடுத்து நேற்று முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை என்று முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. கேளிக்கை வரி நீக்கம், திரையரங்கு கட்டணத்தை உயர்த்த அனுமதி ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசின் முன் வைத்து இந்த போராட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை சற்று முன் வெளியாகியுள்ளது.

இதன்படி இனிமேல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இனிமேல் சென்னையில் திரையரங்குகள் கட்டணம் 160 ரூபாயாகவும், மற்ற நகரங்களில் 140 ரூபாயும் உயரும்.அதேபோல் ஏசி இல்லாத திரையரங்குகளில் சென்னையில் ரூ.120 வரையும், மற்ற நகரங்களில் ரூ.100 வரையிலும் உயரும்.

ஏற்கனவே திரையரங்குகள் கட்டணம் மட்டுமின்றி திரையரங்குகளில் விற்கப்படும் திண்பண்டங்கள், பார்க்கிங் ஆகிய கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.