ரூ.100 கோடி மதிப்பில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. மேலும் இந்த நோட்டுக்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு பின்னரும் இந்த நோட்டுக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்ள கான்பூரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரகசிய அறை முழுவதும் இந்த நோட்டுக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்ததோடு இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கும் தகவல் கொடுத்தனர். இந்த பணம் பிரபல சோப் நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு சொந்தமானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 99% பணமதிப்பிழப்பு நோட்டுக்கள் வங்கியிடம் திரும்பிவந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ரூ.100 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.