Download App

RRR Review

ஆர்ஆர்ஆர்  : பிரம்மாண்டத்தின் உச்சம்

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைbபடங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அந்த திரைப்படத்தில் பாதி இருந்தால் கூட 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெற்றி பெறும் என்ற நிலையில் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

முதல் கட்டமாக 3 அறிமுகக் காட்சிகள் முதல் அரை மணி நேரத்தில் வருகிறது. மல்லி என்ற குழந்தையை அதன் தாயை அடித்துக் கொன்றுவிட்டு வெள்ளைக்காரதுரை பெண் ஒருவர் கடத்திக் கொண்டு சென்று விடுகிறார். இதனை அடுத்து ராம்சரண் தேஜா தனது தனது வெள்ளைக்கார மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஒரு மிகப்பெரிய புரட்சி படையின் ஊடே சென்று தனது சாகசத்தை நிரூபிக்கிறார். மூன்றாவதாக மல்லி என்ற சிறுமியை மீட்க போவதாக சவால் எடுத்து ஜூனியர் என்டிஆர் டெல்லியை நோக்கி செல்கிறார். இந்த மூன்று புள்ளிகளும் இணையும் இடம் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்பதும் எதிரும் புதிருமாக இருக்கும் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இடையே ஏற்படும் ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன? இருவரும் இணைந்து என்ன செய்யப்போகிறார்கள்? மல்லியை மீட்டார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை

வழக்கம்போல் எஸ்எஸ் ராஜமவுலி படம் என்றாலே ஹீரோவை விட இயக்குனருக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் என்பதால் அவரைப் பற்றி முதலில் பார்ப்போம். விஜயேந்திர பிரசாத்தின் திரைக்கதையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மிக அருமையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சியில் புலியுடன் சண்டை காட்சி, ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணையும் காட்சியும், வெள்ளைக்கார துரையின் மாளிகையின் உள்ளே ஜூனியர் என்டிஆர் நுழையும் இடைவேளை காட்சி, அதன்பின் ராம்சரணை மீட்க என்.டிஆர் புறப்படும் காட்சி, இருவரும் சேர்ந்து வெள்ளைக்கார படைகளை அடித்து நொறுக்கும் காட்சி என ஆங்காங்கே எஸ்எஸ் ராஜமவுலியின் பாணி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலான ஆரம்ப அறிமுக காட்சிகள், 3 மணி நேர நீள படம் என்பதால் இடையிடையே சலிப்படைய வைக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் எப்போது இடைவேளை வரும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான மசாலா காட்சிகள் அதிகம் உள்ள நிலையில் ஒரு சில மசாலா காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் தமிழ் ஆடியன்ஸுக்கு இந்த அதிகபட்ச மசாலா காட்சிகள் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

நடிப்பில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவருமே மிரட்டியிருக்கிறார்கள்.. ஜூனியர் என்டிஆர் ஒரு படி மேலே என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.. நாயகிகள் அலியாபட் மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகிய இருவரும்  பெயரளவுக்கு ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார்.  ஆனாலும் இருவருமே கதையின் திருப்பத்திற்கு உதவுகின்றனர் 

செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாதத்தை படத்தொகுப்பும்  படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.,இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை சூப்பர்.  

மொத்தத்தில் 'ஆர்ஆர்ஆர்' சர்வதேச தரத்தில் ஒரு தென்னிந்தியா சினிமா

Rating : 3.5 / 5.0