அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்த 'ஆர்.ஆர்.ஆர்.' ஹீரோ: பாஜகவில் இணைகிறாரா?

உள் துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தின் ஹீரோ திடீரென சந்தித்தது தெலுங்கு மாநிலங்களின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா மாநிலத்திற்கு வந்து இருந்தார். அப்போது அவர் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அந்த படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து நேற்று ஹைதராபாத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்ததாகவும், ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் குறித்து இருவரும் பேசியதாகவும் தெலுங்கானா மாநில பாஜக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் ஜூனியர் என்டிஆர் அரசியல் குடும்பத்து வாரிசு என்பதாலும், அவருக்கு தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாலும் அவரை பாஜக பக்கம் இழுக்க இந்த சந்திப்பு நடந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல திரையுலக நட்சத்திரங்களை பாஜக தனது கட்சியில் இழுத்து உள்ள நிலையில் தற்போது தெலுங்கு நட்சத்திரங்களையும் இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.