போலீஸாரையே கொன்ற ரவுடிகள்: துரத்தி துரத்தி வேட்டையாடிய காவல் துறை!!! கருவறுத்த பரபரப்பு சம்பவம்!!!
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
கடந்த வெள்ளிக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு பகுதியில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை பிரபல ரவுடிகள் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடியான விகாஸ் துபேவை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் விகாஸ் உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய 6 பேர் இன்று காலை கைது செய்யப் பட்டு இருக்கின்றனர். மேலும் போலீஸார் நடத்திய என்கவுண்டரில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு பாஜக அமைச்சரவையில் இடம்பெற்ற சந்தோஷ் சுக்லா என்பவரை ரவுடிகள் சுட்டுக்கொலை செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ரவுடிதான் இந்த விகாஸ் துபே. இவர் கடந்த வெள்ளிக்கிழந்மை கான்பூர் அடுத்த பிக்ரு பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது காவல் துறையினரை நோக்கி ரவுடி கும்பல் ஏ-47 ரக துப்பாக்கியை வைத்து சுட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் சம்பவ இடத்திலேயே 8 போலீஸார் உயிரிழந்தனர். இதனால் விகாஸ் துபே தலைக்கு போலீஸார் பரிசுத் தொகையையும் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 8 போலீஸார் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் சில அரசாங்க அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகப் பரபரப்பு கிளம்பியது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி கான்பூர் முன்னாள் காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி, துணை ஆய்வாளர் கிருஷ்ண குமார் சர்மா போன்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிக்ரு பகுதியில் தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர் என்ற தகவலை காவல் நிலையத்தில் இருந்து ரவுடிகளுக்கு இவர்கள் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பின்னர் இன்று காலை கான்பூரின் உஜ்ஜைன் பகுதியில் ரவுடி விகாஸ் துபே பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து காவல் துறையினரை அவனை கைது செய்தனர். பின்னர் கான்பூர், ஃபரிதார்த், ஹரியானா போன்ற இடங்களில் விகாஸ் துபே வுடன் தொடர்புடைய 4 ஆண் கூட்டாளிகள் மற்றும் 2 பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு கான்பூர் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கான்பூர் காவல் நிலையத்தில் இருந்து ரன்வீர் என்ற ரவுடி தப்பிக்க முயன்றபோது காவல் துறையினர் அவனை சுட்டு வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல கான்பூர் பகுதியில் பிரதாப் மிஸ்ரா என்ற ரவுடியை காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். 8 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் மற்றும் இருவர் என்கவுண்டரில் சுடப்பட்டனர். இதனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.