ரோல்மாடல் இயக்குநர் மணிரத்தினம் பிறந்த தினம் இன்று...

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

 

இளைய தலைமுறை இயக்குநர் பலருக்கும் ரோல் மாடலாகவும் மந்திரச் சொல்லாகவும் இருக்கும் இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் பிறந்த தினம் இன்று... இயக்குநர்கள் பெரும்பாலும் உதவி இயக்குநர்களாக பல ஆண்டுகள் பணியாற்றி அல்லது ஒரு குறும்படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுப்பார்கள். ஆனால் இவரது அணுகுமுறையே முற்றிலும் புதியதாக இருக்கிறது. இவரது பூர்வீகம் சென்னை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர் அடிப்படையில் மதுரைக்காரர். 1956 இல் பிறந்த இவர் ஜம்னாலால் பஜாஜ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டத்தை முடித்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் குடும்பம் கலைப் பின்னணி கொண்டது என்பதால் இவருக்கு பல நேரங்களில் உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைத்து இருக்கும். ஆனால் அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் மேலாண்மை துறையில் தனது பணியை செய்ய ஆரம்பித்தார்.

சென்னையில் TVS நிறுவனத்தில் பணி. சென்னையை அடுத்து மும்பையில் கன்சல்டண்டாக பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய வேலையில் எந்த பிடிப்பும் இல்லாமல் போகிறது. உடனே சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்புகிறார். அவருடைய நண்பர்கள் சிலர் ஒரு கன்னடப் படத்தை எடுக்கும் பணியில் பிசியாக இருந்தபோது அவர்களுடன் சில மாதங்கள் தங்கியிருந்து வேலையைக் கற்றுக் கொள்கிறார். சில மாதங்கள் கழித்தப்பின்பு ஒரு கதையை இயக்க தயாராகிறார். பல தயாரிப்பாளர்களை சந்திக்கவும் செய்கிறார். ஒருவழியாக 1983 இல் கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி படத்தை இயக்குகிறார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை.

இவருடைய கதையில்தான் தவறு இருக்கிறது என நினைத்த அவருடைய நண்பர்கள் சிலர், ஒரு மலையாளக் கதையைக் கொடுத்து அதை இயக்க சொல்கின்றனர். குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் நண்பர்களின் கதையை இயக்க ஒப்புக் கொள்கிறார். மோகன்லால் நடிக்க 1984 இல் உணரு என்ற மலையாளம் படம் தயாராகிறது. ஆனால் இந்தப் படமும் நினைத்தப்படி ஓடவில்லை. அடுத்தடுத்து இதய கோவில், பகல் நிலவு என இரண்டு படங்களை இயக்குகிறார். அந்தப் படங்களும் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமா துறையே உனக்கு ஒத்து வராது, நீ பழையபடி வேலைக்கே போ என குடும்பம் சொல்கிறது. ஆனால் மணிரத்தினம் விடாப்பிடியாக தனது அண்ணனிடம் சென்று “வேறு யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம். நீங்க என்னுடைய ஒரு படத்தை மட்டும் தயாரிங்க.. ஒருவேளை சரியாக போகலைனா நா இனிமே சினிமாவே எடுக்கல” இப்படித்தான் கேட்கிறார்.

1986 இல் இவரது இயக்கத்தில் மௌனராகம் படம் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் சிறந்த இயக்குநராகவும் அறியப் படுகிறார். இந்தப் படம் வெளியான பின்பு கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவரது இயக்கத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஒரு வெற்றிகரமான இயக்குநராகவே இந்த உலகம் அவரை போற்றுகிறது. எப்போதும் ஒரே மாதிரியான கதையை எடுப்பதை அவர் விரும்புவதில்லை. புது பாணி, புது கதையமைப்பு, புது வடிவம் என்று படத்துக்குப் படம் வித்தியாசத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்.

1987 இல் நாயகன் படம் வெளியாகிறது. சிறந்த உலகத் திரைப்படங்கள் 100 வரிசையில் இந்தப் படமும் இடம் பெறுகிறது. தென்னிந்தியத் திரைப்படங்களில் வெற்றிக் கொடியை பறக்க விடும் அளவிற்கு இவரது புகழ் ஓங்குகிறது. 1990 சிறந்த காதல் படமாக அஞ்சலி வெளியாகிறது. 1991 இல் தளபதி இன்னொரு இமாலய வெற்றியைக் கொண்டாடுகிறார். ஆனால் படிப்படியான எந்த வெற்றியிலும் ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொண்டு வெளியே நடமாடியதும் இல்லை. அதேபோல தோல்வி வந்தபோதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை. இதுதான் இவரிடம் இருக்கும் மிகச்சிறந்த குணாம்சமாகவே சினிமா உலகம் பார்க்கிறது.

தன்னுடைய கதையை யாரிடமும் இவர் கலந்து ஆலோசிக்க மாட்டாராம். கதையைப் பெரும்பாலும் பென்சிலில்தான் எழுதுவாராம். ஒருவேளை தவறு இருந்தால் எளிதாகத் திருத்திக் கொள்ள முடியும் என்பதற்காக. மிகப்பெரிய தனிமை விரும்பி. இவரைப் பற்றி தெரிந்தவர்கள் இதைப் பெரும்பாலும் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களாம். படத்தை இயக்கும்போதும் நடிகர்கள் தானாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புவாராம். அவர்கள் நடித்தப் பிறகு தனக்கு வேண்டியதைக் கேட்டு அடுத்தடுத்து திருத்தம் செய்து கொள்வாராம். எதற்காகவும் எந்நேரத்திலும் பெரிதாக கோபப்படவே மாட்டாராம். எப்போதும் தன்னுடைய உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தவர். படப்பூஜை, தேங்காய் போன்ற சமாச்சாரங்களுக்கு பெரிதும் மதிப்பு கொடுப்பதில்லையாம்.

இவர் எடுத்தப் படத்திலேயே மிகவும் சிரமப்பட்டு எடுத்தப் படம் இருவர் என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்துப் படங்களிலும் ரயில், மழை, கண்ணாடி காட்சிகள் இடம்பெறுவதும் வழக்கம். மிகவும் அழுத்தமான வசனங்கள் அதுவும் குறைந்த சப்தத்தில் இவரது படித்தில் இடம் பிடித்திருக்கும். இதுதான் இவருடைய ஸ்டைல் என்று ஒட்டுமொத்த சினிமாத் துறையும் கொண்டாடுகிறது. ஒட்டுமொத்த சினிமாத் துறையே வேறு ஒரு பாதையில் பயணித்தால் எப்போதும் இவருடைய பாதை மட்டும் தனி பாதையாக இருக்கும். தன்னுடைய ஆரம்ப காலத்தில் சந்தித்த தோல்வியால் இவர் இயக்கும் அனைத்தப் படங்களும் தனது அண்ணன் அல்லது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில்தான் தாயராகும். தேவையில்லாத சங்கடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றே விரும்புவார். அதேபோல இவருடைய படப்பிடிப்புகள் பெரும்பாலும் இந்தியாவில்தான் நடக்கும். தேவையில்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்வதையும் இவர் விரும்ப மாட்டார்.

1991 இல் வெளியான தளபதி படம் மகாபாரத்தில் வரும் கண்ணன் துரியோதனன் கதை வடிவமைப்பு என்று விமர்சனம் வைக்கப்பட்டது. அடுத்து 1992 இல் வெளியான ரோஜா படத்தில் “இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள்” எனப் படம் வெளிப்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் வெளியானது. இதையும் அவர் ஒருபோதும் பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. 2000 இல் அலைபாயுதே. இன்னொரு இமாலய வெற்றி. புதுமையான கதையமைப்பு, இளைஞர்கள் மனதில் இன்றைக்கும் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு வசனங்கள், திரைக்கதை. அடுத்து 2002 முற்றிலும் வித்தியாசமாக கதையமைப்பு. “கன்னத்தில் முத்தமிட்டால்” இலங்கை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப்படத்தின் சில காட்சிகள் மட்டும் இலங்கையில் படமாக்கப்பட்டது.

2004 இல் ஆயுத எழுத்து. இளைஞர்கள் மத்தியில் புது உத்வேகத்தைக் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம். 2010 இல் ராவணன். மகாபாரத்தைத் தழுவி அதிலும் விமர்சனக் கேள்வியை நாசூக்காக வைத்து எடுக்கப்பட்ட படம். 2013 இல் கடல். இதுவும் அநியாயத்தைத் தோலுரிக்க கிறிஸ்துவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான கதை. 2015 இல் ஓகே கண்மணி. புது நாகரிக வாழ்க்கையை வெளிப்படுத்தி இருந்தாலும் கடைசியில் இந்தியக் கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பதாக விமர்சிக்கப் பட்டது. குரு, உயிரே, பம்பாய் போன்ற பல படங்கள் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

இவருடைய சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று கதை வசனங்கள். “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல”, “நட்புனா என்னான்னு தெரியுமா?”, “மிஸ்டர் சந்திரமௌலி”, “சக்தி நீ அழகா இருக்கன்னு நினைக்கல” இப்படி பல கதை வசனங்கள் என்றைக்கும் மறக்க முடியாத அனுபவங்களாக வலம் வருகின்றன. அவர் இயக்கிய பல்லவி அனுபல்லவி முதற்கொண்டு தளபதி வரை இளையராஜா இசையில் வெளியானது. பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால் ஏ.ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார். ரோஜா படத்தில் இருந்து இன்று வரை இவர் இயக்கும் அனைத்துப் படத்துக்கும் இவர்தான் இசை. பெரிதாக எந்த இடையூறுகளையும் சண்டையையும் விரும்பாத இவரது குணத்தால் சினிமா உலகில் தனிமை விரும்பியாகவே வலம் வருகிறார் இயக்குநர் மணிரத்தினம்.

More News

விஷம் குடிப்பதை செல்பி எடுத்து தற்கொலை செய்த நடிகை: பரபரப்பு தகவல்

பெங்களூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் விஷம் குடித்து கொண்டே செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3000ஐ நெருங்கிவிட்ட ராயபுரம், 2000ஐ நெருங்கிய 2 மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் 500,600 என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 1000ஐ தாண்டியுள்ளதால்

2 லட்சத்தை நெருங்கிவிட்டது கொரோனா பாதிப்பு: உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துவிட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கின்றேனா? சிம்ரன் அளித்த விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

சலூன் கடைக்கு செல்ல ஆதார் அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும்