என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.
- IndiaGlitz, [Wednesday,January 08 2020] Sports News
2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும், இதுதொடர்பாக பிசிசிஐ விரிவாக ஆய்வு நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டன.
அவற்றில் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாக தங்கிய விஷயம்தான். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர், வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்குவதற்குக் கட்டுப்பாடு விதித்தது. போட்டி தொடங்கி 21 நாட்களுக்கு பிறகு 15 நாட்கள் மட்டுமே வீரர்கள் மனைவிகளுடன் தங்க வேண்டும்.
ஆனால் பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டை மீறி மூத்த வீரர் ஒருவரின் மனைவி 7 வாரமும் அவருடன் தங்கியிருந்ததாக சர்ச்சையான செய்தி வெளியானது. மூத்த வீரர் யார் என்று சொல்லப்படவில்லை என்றாலும் அதுவே தோல்விக்கு காரணம் என்று பலரால் கிண்டலடிக்கப்பட்டது.
இதற்கிடையே, அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா பி.டி.ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், '' எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தனர்.இந்தச் செய்திகள் வெளிவந்தபோது சில நண்பர்கள் என்னிடம்வந்து இது உண்மைதானா இல்லையா என்று கேட்டனர். அதற்கு நான் சிரிக்க மட்டும் செய்தேன். ஆனாலும் இந்தச் செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதில் என் குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டார்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம். விராட் கோலிக்கு இதே நிலைதான். குடும்பங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.