நாங்கள் என்ன கால்நடைகளா? ஐபிஎல் ஏலத்தை கடுமையாக எதிர்க்கும் சிஎஸ்கே வீரர்!
- IndiaGlitz, [Tuesday,February 22 2022] Sports News
சென்னை சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடிவரும் ராபின் உத்தப்பா ஐபிஎல் ஏலமுறை மனதளவில் கடும் அழுத்தத்தை கொடுக்கிறது என்றும் அதற்குப் பதிலாக Draft முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடிவரும் ராபின் உத்தப்பா ஐபிஎல் ஏலமுறைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஏலமுறை மனதளதில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போது தேர்வு முடிவிற்கு காத்திருப்பதைப் போன்றே உணர்வு ஏற்படுகிறது. கூடவே இதில் ஏலம் போகதாவர்கள் திறமையில்லாத வீரர்கள் என்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
நான் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற வேண்டும் என்று எனது மகன் பிரார்த்தனை செய்தார். என்னை பொறுத்தவரை ஐபிஎல் ஏலத்தை நிறுத்த வேண்டும். வீரர்களை கால்நடைகள் போல ஏலம் விடுகிறார்கள். நமது பெயர் முதலில் இருந்து அதிக விலைக்கு ஏலம் போனால் மட்டுமே சிறந்த வீரர் என்ற மதிப்பு கிடைக்கிறது. குறைந்த விலைக்கு போகும்போது குறைந்த பணம் மட்டுமே கிடைப்பதோடு மதிப்பும் குறைந்து போகிறது. இதனால் சமம வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
எனவே ஐபிஎல் ஏலமுறைக்குப் பதிலாக Draft முறையைக் கொண்டுவர வேண்டும். அப்போது வீரர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும். வீரர்களின் திறமையை வைத்த மதிப்பிடப்பட வேண்டுமே தவிர பணத்தை வைத்து கணக்கிடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடுவதை நான் விரும்புகிறேன். இங்கு எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. இந்த நிம்மதியோடு ஒரு வீரர் விளையாடினாலே போதுமானது எனவும் கூறியுள்ளார். ராபின் உத்தப்பாவின் இந்தக் கருத்துத் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.