பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.43 ஆயிரம் கொள்ளை!!! நூதனத் திருட்டின் மர்மப் பின்னணி!!!
- IndiaGlitz, [Monday,August 24 2020]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.43,900 கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. பால்கர் மாவட்டத்தின் வசாயை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் பீட்சாவை ஆர்டர் செய்திருக்கிறார். இதற்காக ரூ.359 யை வங்கியில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் உள்ள கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அப்பெண். மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நான் பீட்சா ஆர்டர் செய்திருந்தேன். எனக்கு இன்னும் டெலிவரி கிடைக்கவில்லை என கேட்டப் பெண்ணிற்கு இவர் கொரோனா காரணமாக பீட்சாவை டெலிவரி செய்ய முடியவில்லை. உங்களது வங்கி கணக்கு எண்களை சொல்லுங்கள். கூடிய விரைவில் உங்களது பணம் திரும்பச் செலுத்தப்படும் எனக்கூறி வங்கிக் கணக்கின் விவரங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
விவரங்களைப் பெற்றுக்கொண்ட சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 43,9000 ரூபாய் வேறொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பதறிப்போன அப்பெண் தற்போது மாணிக்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.