தீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? வடமாநிலக் கும்பலா?
- IndiaGlitz, [Wednesday,January 27 2021]
சீர்காழியில் 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தமிழக போலீஸார் 12 மணி நேரத்தில் கைது செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இச்சம்பவத்தில் வட மாநிலத்தவர் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் அடகு கடை மற்றும் தங்க மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தவர் தன்ராஜ். இவரது மனைவி ஆஷா மற்றும் மகன் அகில். இவருடைய மனைவி நிகில் ஆகிய அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தன்ராஜ் வீட்டின் கதவை 3 பேர் கொடூரமாகத் தட்டி உள்ளனர். இதனால் பயந்து கொண்டே கதவை திறந்த தன்ராஜை அந்த நபர்கள் தாக்க ஆரம்பித்து உள்ளனர். இதைப்பார்த்து கொண்டு இருந்த அவரது மனைவி ஆஷா குறுக்கே வர அவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு, அங்கு வந்த மகன் அகிலையும் தாக்கி கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
பின்னர் கத்திக் கூச்சல் போட்டால் உங்களுக்கும் இதே நிலமைதான் என்று தன்ராஜையும் அவரது மருமகள் நிகிலையும் மிரட்டி உள்ளனர். மேலும் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 16 கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு தன்ராஜின் காரிலேயே தப்பிச் சென்றது அந்தக் கொள்ளைக் கும்பல்.
இந்நிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வந்தவர்கள் ஹிந்தியில் பேசியதாகக் கூறியுள்ளார். இதனால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தவர் என்பது உறுதிச் செய்யப்பட்டது. அடுத்து தன்ராஜின் காரிலேயே தப்பித்துச் சென்றதால் அந்த காரின் ஜிபிஎஸ் டிராக் செய்யப்பட்டது.
இதற்கிடையே சீர்காழி பகுதியில் உள்ள எரும்பூர் எனும் கிராமத்தின் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு கார் நிற்பதை அந்த ஊர் மக்கள் கவனித்து உள்ளனர். மேலும் அங்கிருந்த இளைஞர்கள் வட மாநிலத்தவராக தெரிந்ததோடு அவர்களின் சட்டைகளில் ரத்தக்கறை இருந்ததையும் கிராம மக்கள் கவனித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். ஏற்கனவே கார் ஜிபிஎஸை டிராக் செய்த போலீஸார் உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வர 3 பேர் கொண்ட கும்பலில் உள்ள ஒருவர் தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார். இதனால் உஷாரான போலீஸ் அவரைச் சுட்டுக் கொன்றது.
மற்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 16 கிலோ தங்க நகை மீட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வீட்டின் கதவை தட்டி 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை நடிகர் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் படத்தில் பார்த்தோம். முன்னதாக வடமாநிலத்தை சேர்ந்த சில லாரி டிரைவர்கள் இதுபோன்ற அசம்பாவிதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் செயல்பட்டு வந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள 25 கிலோ தங்கத்தை சில பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான். மேலும் இவர்கள் கொள்ளை அடித்த தங்கத்தை அந்நிறுவனத்தில் இருந்த பையில் வைத்தே எடுத்துச் சென்று உள்ளனர். இதனால் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவியை டிராக் செய்த தெலுங்கானா போலீஸ் அவர்கள் ஹைத்ராபாத் பகுதியில் ஒரு லாரிக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குப் பின்பு 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு 12 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகை மீட்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களிலும் ஜிபிஎஸ் கருவியே பிரதானமாக செயல்பட்டு இருக்கிறது.