ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி திடீர் நீக்கம்!
- IndiaGlitz, [Saturday,July 11 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவர் தற்போது ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இந்த அமைப்பு தான் விரைவில் அரசியல் கட்சியாக மாறவிருப்பதாகவும், அதன் நிர்வாகிகள் அப்படியே கட்சி நிர்வாகிகளாக மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ரஜினி மக்கள் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ராஜமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஜினி மக்கள் மன்ற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி மன்றத்தை வளர்க்காமல், மன்றத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட துணை
செயலாளர் ராஜமூர்த்தி அவர்கள் (ஏற்கெனவே மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவினால் 7-9-2018 ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்) காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர்கள் மன்ற பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட இருவரும் எவ்வித மன்ற பணிகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், இனி வரும் காலங்களில் இவர்களது நடவடிக்கைகளை மாநில தலைமை கூர்ந்து கவனித்து, அவர்களது செயல்பாட்டினை கருத்தில் கொண்டு மீண்டும் பொறுப்பு வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படும்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேற்கண்ட இருவரிடம் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி செயல்படுபவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.