'கனா' படத்திற்கு வீடியோ விமர்சனம் செய்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

ஒரு திரைப்படம் வெளியானவுடன் அந்த படத்தை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருந்தால் நீங்களும் ஒரு விமர்சகர்தான், அந்த படத்திற்கு உங்கள் இஷ்டப்படி ஒரு ரேட்டிங் கொடுத்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஒருசிலர் பணம் பெற்றுக்கொண்டு படத்திற்கு ஆதரவாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் நெகட்டிவ் விமர்சனங்கள் தருவதையும் முழுநேர தொழிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்முறையாக பிரபல நடிகர் ஒருவர் விமர்சகராக மாறியுள்ளார். அவர்தான் ஆர்.கே.சுரேஷ். சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' படத்திற்கு ஆர்.கே.சுரேஷ் வீடியோ விமர்சனம் அளித்துள்ளார். 'கனா படத்தின் இயக்குனர் அருண்காமாராஜை தனக்கும் நீண்ட நாட்களாக தெரியும் என்றும் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியிருப்பதாகவும் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த படம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரொம்ப மனசை தொட்ட படம் என்று கூறுவார்களே, அப்படி ஒரு படம் தான் 'கனா' என்றும், நானும் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் என்ற வகையில் ஒரு உண்மையான ஸ்போர்ட்ஸ்மேனுக்கு கிடைக்கும் கைதட்டலுக்கு இணையான மகிழ்ச்சி எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காது என்றும் கூறினார். இந்த படத்திற்கு கிடைத்த கைதட்டலும் அதுபோன்றதே என்றும், இந்த படம் எனது மனதை கவர்ந்த படம் என்றும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.