எனக்கு கோவில் கட்டுங்கன்னு சாமி சொன்னதில்லை, அதுபோல தான் அஜித்தும்: ஆர்.கே.சுரேஷ்
- IndiaGlitz, [Monday,May 29 2017]
பிரபல தயாரிப்பாளரும், இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றவருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது ஏழு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் 'பில்லா பாண்டி'.
இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், அஜித் ரசிகர் மன்ற நிர்வாகி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
இந்த படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் அஜித் ரசிகராக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'சாமி என்றைக்குமே எனக்கு கோவில் கட்டுங்கள், என்னை வழிபடுங்கள் என்று கூறியதில்லை. ஆனால் பக்தர்கள் கோவில் கட்டி சாமியை கும்பிட்டு வருகின்றனர். அதுபோலத்தான் அஜித் ரசிகர்களும். அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்தாலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி கொண்டே தான் இருக்கும், ரசிகர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்' என்று கூறினார்.
மேலும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அஜித் குடும்பத்தினர் தனக்கு நெருங்கிய பழக்கம் என்றும் ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது ஷாலினியை தான் அடிக்கடி பார்த்து பேசியதாகவும், அந்த பேட்டியில் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.