'தர்பார்' நஷ்டம் பிரச்சனை குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து
- IndiaGlitz, [Saturday,February 08 2020]
ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆர்கே செல்வமணி கூறியதாவது:
ஒரு திரைப்படம் என்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது, அந்த திரைப்படம் எவ்வளவு வசூல் ஆகும் என்பதை கணித்து அதன்பிறகு அந்த படத்தை சரியான விலை கொடுத்து விநியோகிஸ்தர்கள் வாங்க வேண்டும்
தற்போது போட்டியின் காரணமாக ஒரு திரைப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு அதன் பின்னர் நஷ்டம் என இயக்குனர் மற்றும் நடிகர் வீட்டிற்கு போய் நஷ்ட ஈடு கேட்பது முறையல்ல என்றும் கூறினார்
ஒரு திரைப்படம் 100 ரூபாய் வசூல் ஆகும் என்று தெரிந்தும் அதை இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு அதன் பின்னர் தங்களுக்கு நஷ்டம் என்று கூறும் நிலைமை தற்போது அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே தொழில் தர்மத்துடன் ஒரு திரைப்படத்தை சரியான விலைக்கு வாங்கினால் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பே இல்லை
அதே போல் போலியான வசூல் கணக்கை பொய்யாக தெரிவித்து ஒரு சிலர் இந்தத் தொழிலையே நசுக்கி வருகின்றார்கள் முதல் நாளே இமாலய வெற்றி, இத்தனை கோடி கலெக்ஷன் செய்தது என பொய்யான தகவல்களை கொடுத்து நடிகர்களின் சம்பளத்தையும் இயக்குனர்களின் சம்பளத்தையும் அவர்களே ஏற்றி விடுகிறார்கள். எனவே இந்த தொழிலில் உண்மையான வசூல் விவரங்களை வெளியே தெரிந்தால்தான் பெரிய படங்களில் நடிக்கும் நடிகர்களும் அந்த படத்தை இயக்கியவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்