கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை: ஒரு லைட்மேனின் வேதனைக்குரல்

கொரோனாவால் திரையுலகமே முடங்கியிருக்கும் நிலையில் சினிமாவில் பணிபுரியும் அன்றாட கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் தொழிலாளிகள் தற்போது குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ தலைவர்‌ என்கிற முறையில்‌ ஒரு பணிவான வேண்டுகோள்‌. தற்போது உலகம் முழுவதையும்‌ பயமுறுத்தி வரும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பால்‌ தமிழ்த்‌ திரைப்பட உலகம்‌ முடக்கி வைக்கப்பட்டு இருப்பதை நீங்கள்‌ நன்கு அறிவீர்கள்‌. சம்மேளனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள்‌ நடக்கின்ற நிலையில்‌ பல்வேறு வேலை நிறுத்தங்களை சந்தித்துள்ளார்கள்‌. தயாரிப்பாளர்களை எதிர்த்து ஊதிய உயர்வு கேட்டும்‌, அரசிடம்‌ கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வேலைநிறுத்த போராட்டங்கள்‌ நடைபெற்றன. .

ஆனால்‌ தற்போது நடக்கின்ற வேலை நிறுத்தம்‌ முற்றிலும்‌. வேறானது ஆகும்‌. சமூகத்திற்காகவும்‌, தேசத்திற்காகவும்‌ தங்களை தாங்களே முடக்கிக்‌ கொண்டு நடைபெறுகின்ற இந்த வேலை முடக்கம்‌ தமிழ்‌ திரைப்படத்தில்‌ பணிபுரிகின்ற தொழிலாளர்களை, தொழில்‌ நுட்ப கலைஞர்களை‌ மிகவும்‌ பாதித்துள்ளது. தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ உறுப்பினராக உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில்‌ ஏறக்குறைய பத்தாயிரம்‌ பேர்‌ தினசரி வேலைக்கு சென்று தினசரி ஊதியம்‌ பெற்று வாழ்க்கை நடத்தும்‌ பரிதாபமான நிலையில்‌ உள்ள தொழிலாளர்கள்‌ ஆவார்‌.

இன்று காலையில்‌ லைட்மேன்‌ சங்கத்தைச்‌ சேர்ந்த உறுப்பினர்‌ ஒருவர்‌ எனக்கு போன் செய்து ’சார் வேலை நிறுத்தம்‌ எப்பொழுது முடியும்‌ என்று கேட்டார்‌. 15ல் இருந்து 20 நாட்கள்‌ ஆகலாம்‌ என நான்‌ பதில்‌ அளித்தேன்‌. சார் நான்‌ வேலைக்கு போய்‌ செத்தால்‌ கூட பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல்‌ என்‌ குழந்தைகள்‌ பசியால்‌ சாவதைவிட நான்‌ கொரோனா வைரஸால்‌ செத்தாலும்‌ பரவாயில்லை” என வேதனையுடன்‌ கூறிய போது ஏற்பட்ட வேதனைகளை என்னால்‌ வார்த்தைகளால்‌ எழுத முடியாது.

இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கின்ற சகோதரர்களுக்கு, குறிப்பாக நடிகர் நடிகையர், சகோதர சகோதரிகளுக்கு, இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும், மேலும் திரைப்படத் தொழிலில் மற்ற அனைத்து பிரிவுகளை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்.

நமது சங்கத்தில் உறுப்பினராக உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் இவரைப்போல ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறு சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10,000 உறுப்பினர்கள் ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் இரண்டு கோடி ரூபாய் ஆகிறது. கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து, உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்கே செல்வமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.