நடிகை ரோஜா வகித்துவந்த பதவி அதிரடியாகப் பறிப்பு… என்ன காரணம்?
- IndiaGlitz, [Monday,July 19 2021]
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அருதிபெரும்பான்மையாக வெற்றிப்பெற்றார். இந்தத் தேர்தல் வெற்றிக்கு நடிகை ரோஜாவின் பிரச்சாரமும் முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.
மேலும் இந்தத் தேர்தலில் நடிகை ரோஜா சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் நின்று எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவிக் கொடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கடும் விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் நடிகை ரோஜாவிற்கு தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பதவியை நடிகை ரோஜா கடந்த 2 வருடங்களாக கவனித்து வந்தார். தற்போது இந்தப் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. காரணம் எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்த அதிரடி முடிவு காரணமாக நடிகை ரோஜாவின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஜாவைப் போலவே இன்னும் சில எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாகவும் அந்த மாற்றத்தின்போது நடிகை ரோஜாவிற்கு ஒருவேளை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.