ஆர்.கே.நகரை விட்டு ஓட்டமெடுக்கும் பொதுமக்கள்: அரசியல்வாதிகள் பயமுறுத்தலா?
- IndiaGlitz, [Friday,December 22 2017]
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த தேர்தலில் இரண்டு பெரிய அரசியல் வேட்பாளர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வாக்காளருக்கு பணத்தை தண்ணியாக இறைத்தது தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்பட அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போதே தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் சத்தியம் வாங்கியதாக கூறிய அரசியல் கட்சிகளின் ஆட்கள், நேற்றிரவே வீட்டு வீடுக்கு சென்று அவர்கள் கையில் உள்ள மையை வைத்து அவர்கள் ஓட்டு போட்டார்களா? என்று சோதனை செய்ததாகவும், ஓட்டு போடாதவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதாகவும் தெரிகிறது. பணம் இல்லை என்று சொன்னவர்களிடம் நாளைக்குள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டு போடாதவர்கள் வீட்டை பூட்டிவிட்டு ஆர்.கே.நகரை விட்டு வெளீயேறியதாகவும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவர்கள் திரும்ப முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்று ஆர்.கே.நகரில் உள்ள பல வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.