ஜோசியம் சொன்னால் கடும் நடவடிக்கை. ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,March 31 2017]
தேர்தல் என்று வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும். அதிலும் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஊடகங்களுக்கு சரியான தீனியாக கருதப்படும் இந்த தேர்தலில் ஊடகங்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருப்பது கருத்துக்கணிப்புதான்.
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் அதிக சதவீதம் ஓட்டு பெறுவார்கள் என்பதை நிபுணர்கள் மூலம் கணித்து கருத்துக்கணிப்பை வெளியிடுவதை ஊடகங்கள் ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளால் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இருப்பதால் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன் 48 மணி நேரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஆனால் தேர்தல் கணிப்புகளை ஊடகங்கள் மட்டுமின்றி ஒருசிலர் ஜோதிடர்களும் வேட்பாளர்களின் ராசியை கணக்கில் கொண்டு இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளம்பரம் பெற்று கொள்ளும் தந்திரமும் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதற்கும் தற்போது தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தேர்தல் நேரத்தில் எந்தக்கட்சி ஜெயிக்கும், எந்தக் கட்சி தோற்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து கருத்துக் கணிப்பு வெளியிடுவது சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறி கருத்துக்கணிப்பு வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் ஜோதிடர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.