ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு. தீபா போட்டியிடுவாரா?
- IndiaGlitz, [Thursday,March 09 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அவருடைய மரணம் காரணமாக கடந்த சில மாதங்களாக காலியாகவுள்ளது. இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில் சற்றுமுன்னர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் மார்ச் 23 முதல் ஆரம்பமாகும் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள் என்றும், வாக்குப்பதிவு ஏப்ரல் 12ஆம் தேதி என்றும், ஏப்ரல் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதால் அவரை எதிர்த்து அதிமுக சசிகலா அணியில் யார் நிறுத்தப்படுவார் என்ற கேள்விக்கு இன்னும் ஒருசில நாட்களில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.