ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இருந்து மதுசூதனன் போட்டியிடுவார் என்று சற்று முன்னர் ஆட்சி மன்றக்குழு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே மதுசூதனன் இதே தொகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு அமைச்சர் பதவியிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை போட்டியிட்டபோது அவருக்கு மாற்று வேட்பாளராக மதுசூதனன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் டி.டி.வி. தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என தெரிவித்தார்.