அஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி

’நேர்கொண்ட பார்வை’ படத்தில் சொல்லப்பட்டிருந்த கண்டெண்ட் அஜித் போன்ற பெரிய ஸ்டார் நடித்ததால் எப்படி அனைவரிடமும் போய் சேர்ந்ததோ அதே போல் ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா நடித்ததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கண்டெண்ட் அனைவரும் போய் சேரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் எனினும் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இந்த படம் தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதால் தியேட்டர்கள் திறந்து, மக்கள் அனைவரும் பயமில்லாமல் எப்பொழுது திரையரங்குகளுக்கு வருகின்றார்களோ அப்போதுதான் இந்த படம் வெளியாகும் என்றும் ஆர்ஜே பாலாஜி கூறினார்.

மேலும் இந்த படத்தின் ஒன்லைன் கதை குறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, ‘நாகர்கோவிலில் அம்மா அப்பா தாத்தா மூன்று தங்கைகள் உடன் கூடிய ஒரு குடும்பத் தலைவன் தான் ஹீரோ. இந்த குடும்பத்தில் அம்மன் வந்து சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் கதை என்றும் நிச்சயம் இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் அன்னையர் தினத்தில் ‘வருங்கால என் குழந்தைகளின் அம்மா’ நயன் என்று விக்னேஷ் பதிவு செய்த சமூக வலைத்தள பதிவு ஒன்று குறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, ‘எனக்கு இருவரும் நண்பர்கள் என்பதால் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து பற்றி நான் பேச விரும்பவில்லை என்றும் அதுகுறித்து அவர்களே தான் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.