வெட்கம், மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க: ஆர்.ஜே. பாலாஜி
- IndiaGlitz, [Tuesday,February 28 2017]
பிரபல நகைச்சுவை நடிகரும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவருமான ஆர்ஜே பாலாஜி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கினார். அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாதங்களில் நிறைய விஷயம் பார்த்துட்டோம். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னர் ஒரு 15 நிமிடம் காமெடியாக பேசுமாறு என்னிடம் கூறினார்கள். ஆனால் இப்ப காமெடி வேண்டுமானால் செய்தி சேனல்களைத்தான் பார்க்க வேண்டும். கவுண்டமணி காமெடியை விட செய்தி சேனலில் பேசுபவர்கள் காமெடி செய்கின்றனர்.
ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களை இன்னொரு பிரிவினர் திட்டுகின்றனர். பின்னர் அதே எம்.எல்.ஏக்களில் ஒருவர் இந்த பக்கம் வந்தவுடன் அவரை வாழ்த்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஒருவேளை வளர்மதி இந்த பக்கம் வந்தால், வளர்மதியே வருக, வளமான தமிழகம் தருக என்று சொன்னாலும் சொல்வார்கள். இந்த நிலையில் நாம் யாரை ஆதரிப்பது?
நான் மாணவர்களை அரசியலுக்கு வருமாறு தூண்டிவிட்டதாக ஒருசிலர் கூறுகின்றனர். அரசியல் என்பது ஆசை இல்லை அது அழிவு. நான் யாரையும் அசிங்கமா பண்ண தூண்டிவிடலை. அரசியலுக்கு வர தூண்டுவது ஒரு தவறா?
ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் அரசியலுக்கு நம்மை போன்றவர்கள் வருவதற்கு பயப்படுகின்றனர். வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம் உள்ள சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம். அதனால் அரசியலுக்கு வருவது இல்லை.
சமீபத்தில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட போது ஏண்டா கேவலமாக இப்படி அடிச்சுக்கிறீங்க என வாய் தவறி பதற்றத்தில் கூறிவிட்டேன். அதுவும் மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறினேன். ஆனால் அதற்கு கூட இருபது பேர் என்னை திட்டியதால் மனம் கஷ்டப்பட்டு 20 நாள் ஃபேஸ்புக் பக்கமே போகவில்லை. ஆனால் இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏவையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டி அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை என்பதை பார்க்கும்போது மனம் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு ஆர்ஜே பாலாஜி ஆவேசமாக பேசினார்.