யாராவது இதை சொன்னா மூஞ்சியிலேயே குத்துங்க: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பிளஸ் டூ மார்க் குறித்து தனது கருத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 10வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ள இந்த அறிவுரை சரியான நேரத்தில் கூறப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் மதிப்பெண்கள் தான் நமது வாழ்க்கையே என்றும், இந்த மார்க் தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று நமது நண்பர்கள், பள்ளியில் உள்ளவர்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் கூறுவார்கள்.

இன்று வெளியான ரிசல்ட்டில் நல்ல மார்க் எடுத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால் அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், நினைத்த மார்க் எடுக்காதவர்கள், ஒரு சில பாடங்களில் பெயில் ஆனவர்களிடம், ‘டேய் தம்பி, ராஜா இதோட உன்னோட வாழ்க்கை முடிந்துவிட்டது என்று யாராவது சொன்னால் அவர் மூஞ்சியிலேயே குத்துங்கள்.

ஏனென்றால் 12வது வகுப்பு மார்க் தான் வாழ்க்கையை முடிவு செய்கிறது என்பது மிகப்பெரிய பொய். அதற்கு மிகப்பெரிய உதாரணம் நான் தான். கடந்த 2002ஆம் ஆண்டில் நான் கணக்கில் பெயிலாகி விட்டேன். ஆனால் என்னுடைய பெற்றோர் எனக்கு ஊக்கம் கொடுத்து 12ஆம் வகுப்பு மார்க் மட்டுமே வாழ்க்கை இல்லை, நீ நன்றாக வாழ்க்கை முன்னேறுவாய் என ஊக்கம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் இன்று நான் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம்.

எனவே வாழ்க்கை என்பது இன்னும் அதிக தூரம் இருக்கிறது, இந்த மதிப்பெண்ணூக்காக வாழ்க்கையை வெறுத்துவிட வேண்டாம். மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தயவுசெய்து மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.