திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? ரித்விகா

  • IndiaGlitz, [Wednesday,January 23 2019]

பிக்பாஸ் இரண்டாவது சீசன் டைட்டில் வின்னரும், நடிகையுமான ரித்விகா அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாகவும், இந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் திருமணத்திற்கு தயாராகவிருப்பதாகவும், திருமணத்திற்கு பின் நடிப்பது குறித்து தனது வருங்கால கணவர் முடிவு செய்வார் என்றும் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்தி பரவியது.

இந்த நிலையில் தனது திருமண செய்தியை ரித்விகா சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய்ச்செய்தி என்றும், இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ' திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் பத்திரிகைகள் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று சேர்த்து எழுதியிருப்பது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்.


சமீபத்தில் ஆன்லைனில் ரிலீஸ் ஆன 'சிகை' படத்தில் நடித்திருந்த ரித்விகா தற்போது எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜானகி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் 'நேத்ரா', 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' போன்ற படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.