நான் என்ன சாதின்னு தேடி கண்டுபிடிங்கடா....ரித்விகா ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வின்னர் ரித்விகாவுக்கு ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவர் குறிப்பிட்ட சாதி என்பதால்தான் இந்த டைட்டில் கிடைத்ததாக விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இந்த விவகாரம் குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் குறையவில்லை.

இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரித்விகா ஆவேசமான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.. என்று ஒரு சாட்டையடி பதிலை கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே அவரை இனவெறியுடன் சக போட்டியாளர்களே ஒருசிலர் பார்த்தனர். ஆனால் அதற்கெல்லாம் பொறுமை காத்ததால்தான் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.