சீமானுக்கு உயரும் ஆதரவுகள்...! வெற்றிக்கனியை சுவைப்பார சீமான்..! கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன..?
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
சீமானுக்கு சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் ஆதரவால், தேர்தல் களத்தில் வெற்றிவாய்ப்பு அவருக்கு ஏறுமுகமாகவே உள்ளது.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிட கழகங்கள், கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி, என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற வித்தியாசமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு தங்கள் முனைப்பை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சீமானின் பிரச்சாரங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிற கட்சிகளை நாசூக்கான முறையில் கிண்டலடிப்பது, கலகலப்பாய் பேசுவது, கைகளை தூக்கி கர்ஜித்து பேசுவது, தனித்து போட்டியிடுவது, வெகுளித்தனமாக சிரிப்பு உள்ளிட்டவற்றால் மக்களிடம் எளிமையாக சென்றடைந்து விடுகிறார். பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டாலும், தனி ரூட்டில் பயணிக்கிறார் சீமான். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவருக்கான வளர்ச்சி அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.
அரசியிலில் எதிர்தரப்பினரை குறித்து ட்ரோல் வீடியோ வெளியிடுவது வழக்கம் தான். மாறி மாறி எதிர்க்கட்சியினரை கிண்டலடித்து வெளியிடும் வீடியோக்களில் லைக்குகள் குவியும். ஆனால் சீமான் பேசினாலே போதும், நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம் தான். இவரின் பேச்சை கட்சிகள் முதல், அனைவரும் உன்னிப்பாய் கவனித்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி முதன் முதலாக களமிறங்கிய வருடம் 2016-இல் தான். கடந்த 5 வருடங்களில் கட்சியின் வளர்ச்சி ஏறுமுகமாகத்தான் உள்ளது. அது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
• கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாதக -1.07% வாக்குகளை பெற்று, ஒன்பதாவது இடத்தில் இருந்தது.
• சென்ற 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, 2.15% வாக்குகளை பெற்று, 4-ஆம் இடம் பிடித்தது.
• கடந்த 2019-இல் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 3.15% வாக்குகளை வாங்கியிருந்தது.
• சென்ற 2019 மக்களவை தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர், 3.9% வாக்குகள் பெற்றது.
• கடந்த 2019 உள்ளாட்சி தேர்தலின் போது, ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாதக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சீமான் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 234 தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடுகிறார். குறிப்பாக இக்கட்சியில் தான் ஆண்களுக்கு நிகராக, பெண் வேட்பாளர்களுக்கு போட்டியிட 117 சீட்கள் தரப்பட்டுள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாவது,
• தமிழகத்தில் முதல்வராக யார் வர வேண்டும்..? என கேட்கப்பட்ட கேள்வியில், 4.93% மக்கள் சீமானுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
• நாம் தமிழர் மண்டல வாரியாக பார்க்கையில், 7.61% பெற்று, 3-ஆம் இடத்தில் உள்ளது.
• கொங்கு வட்டாரத்தில், 3.44% பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
• திருச்சி,உள்ளிட்ட மத்திய டெல்டா மண்டலங்களில் 5.29% பெரும் என கணிப்புகள் கூறுகிறது.
• வடக்கு மண்டலத்தில், 2.39% பெற்று 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
• சென்னையில் 4.46 % பெற்று-, 4-வது இடத்தைபிடித்துள்ளது.
தமிழகத்தில் பெரிய கட்சிகள் களத்தில் இருந்தாலும், நாம் தமிழர் தற்போது 3-ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சமூக வலைதள ஆதரவுகள், ரியாலிட்டியில் சரிவருமா..? என நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.