சாதித்துக்காட்டிய இளம் நட்சத்திர வீரர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும், கடந்த 13 ஆண்டு கால கிரிக்கெட் தொடரை உயிரோட்டத்துடன் வைத்திருக்க மிக முக்கியக் காரணமாக இருப்பது, ஆண்டுக்கு ஒரு இளம் ஹீரோ இந்த தொடர் மூலம் உருவாவதே காரணமாகும்.
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதன் லீக் போட்டியின் முடிவில் ‘டாடி அணி’யான சென்னை அணி மெகா சொதப்பல் சொதப்பிக் கடைசியில் ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. இருந்தாலும் மூன்று முறை சாம்பியன் என்ற பெயரைக் காப்பற்றத் தவறியது.
இந்த ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல இளம் ஹீரோக்களை உருவாக்கத் தவறவில்லை. விரைவில் இந்திய அணிக்காக ஜொலிக்கக் காத்திருக்கும் சில நட்சத்திரங்களைப் பற்றி பார்க்கலாம்
.
சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்திலும் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் வீரர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் மிகப் பெரிய பலம் சேர்த்தவர் சூர்யகுமார் யாதவ். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் விரைவாக வெளியேறினாலும் மூன்றாம் மட்டையாளராகக் களமிறங்கும் இவர் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தது மட்டுமில்லாமல், ரன்களை வேகமாகவும் அதிகமாகவும் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறவில்லை. இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டியில் பங்கேற்று, 410 ரன்கள் குவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலியின் கவனத்தை ஈர்த்துள்ள இவருக்கான நேரம் விரைவில் வரும் என கங்குலி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
தேவ்தத் படிக்கல்
உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே நூறு முறை யோசிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணி இருக்கும்போது, இளம் உள்ளூர் வீரரான தேவ்தத் படிக்கலுக்குத் துவக்க வீரராகவே வாய்ப்பு அளித்த பெங்களூர் கேப்டன் விராட் கோலியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கோலியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ள படிக்கலும் தவறவில்லை. கோலி, டிவிலியர்ஸ் போன்ற சர்வதேச அனுபவமுள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை படிக்கலுக்குச் சொந்தம். இவர் 14 லீக் போட்டியில் 472 ரன்கள் அடித்துள்ளார். ப்ளே ஆஃப் சுற்றில் இவருக்கு அடுத்துள்ள கோலி (460 ரன்கள்) இவரை ரன் அடிப்படையில் முந்தினாலும், இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட இளம் வீரர்களில் இவரும் ஒருவர்.
சஞ்சு சாம்சன்
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன். தொடரின் துவக்கத்தில் அதிரடியில் மிரட்டிய இவர், போகப்போகக் கொஞ்சம் சறுக்கலைச் சந்தித்தார். இருந்தாலும் இந்த ஆண்டு 14 லீக் போட்டிகளில் விளையாடி, 375 ரன்கள் அடித்துள்ளார். அதோடு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 26 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ராகுல் திரிபாதி
இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட இளம் வீரர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரரான ராகுல் திரிபாதியும் ஒருவர். இக்கட்டான நிலையில் அணியைச் சரிவில் இருந்து போராடி மீட்ட வீரர்களில் ஒருவர்.
கொல்கத்தா அணி இந்த ஆண்டு தொடர் முழுதுமே பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டது. கேப்டன் மாற்றம், அடுத்த சுற்றுக்கான நெருக்கடி எனப் பல்வேறு சிக்கல்களை அந்த அணி எதிர்கொண்டது. திரிபாதி 11 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் விளாசினார்.
ஷுப்மன் கில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆன்ட்ரே ரஸல், இயான் மார்கன் என அதிரடி வீரர்கள் பல இருந்தாலும், தனது கிளாசிக் பேட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பியவர் ஷுப்மன் கில். துவக்க வீரரான இவர், இளம் வயதிலும் நல்ல அனுபவம் வாய்ந்தவர் போலவே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில முக்கியமான போட்டிகளில் இவர் அமைத்துக்கொடுத்த நல்ல அடித்தளம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவியது. இவர் 14 போட்டிகளில் பங்கேற்று, 440 ரன்கள் குவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி
பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக திகழும் டி-20 கிரிக்கெட் தொடரில் இம்முறை தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தனித்துத் தெரிந்தார். வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்முறை ஐபிஎல் போட்டிகள் நடந்தபோதும், ஒரு சுழற்பந்து வீச்சாளரான இவர் டெல்லி அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 13 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட் சாய்த்து, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் டாப்-10இல் உள்ளார்.
நடராஜன்
இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட வீரர்கள் பட்டியலில் தங்கராசு நடராஜனும் ஒருவர். சேலத்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துவக்கம் முதலே மிரட்டலாகப் பந்துவீசினார். லீக் சுற்றில் 14 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக தொடரின் முதல் பாதியில் இவரின் பந்துவீச்சு மிகவும் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. போட்டியின் நெருக்கடியான கட்டமான கடைசி நேரத்தில் இவரின் துல்லியமான யார்க்கர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை நடுநடுங்க வைத்தது என்பதைக் கண்கூடாக காணமுடிந்தது.
ருதுராஜ் கெய்க்வாட்
இவர்களைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசிக் கட்டத்தில் இடம்பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய திரமையை நிரூபித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார். இவர் ஆடும் விதம், டெஸ்ட் போட்டி உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஏற்ற வலுவான மட்டைத் திறன் இவரிடம் இருப்பதைப் பறைசாற்றியது. 6 போட்டிகளில் ஆடி மூன்று அரை சதங்களுடன் 204 ரன்களை இவர் எடுத்துள்ளார்.
இவருடைய சிறந்த பந்துவீச்சுக்குப் பரிசாக இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments