மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 2 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தையும் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த அதிர்ச்சியே இன்னும் திமுக தொண்டர்களிடையே இருந்து வரும் நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.