இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021] Sports News
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கும் முடிவை ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக ரிஷப் பந்த் தேர்வாகி உள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த வகையில் சிட்னியில் நடைபெற்ற 2 ஆவது இன்னிங்ஸில் 97 ரன்களும் பிரிஸ்பனில் நடைபெற்ற போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் 89 ரன்களும் எடுத்து இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பனில் வெற்றிக் கோப்பையை பெற முடிந்தது. இதன் அடிப்படையில் ரிஷப் பந்தின் பெயரை ஐசிசி விருதுக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறது.
அதேபோல இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 228 ரன்களும், 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 186 ரன்களும் எடுத்து இருந்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த முடிந்தது. அந்த அடிப்படையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் 2 ஆவது இடம் பெற்று உள்ளார்.
அடுத்து அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிரிலிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானை சேர்ந்த டயானா பெய்க், தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜானே ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து உள்ளனர்.
இந்நிலையில் ரிஷப் பந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரக்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பனிச்சரிவு பொழிவிற்கு தன்னுடைய சம்பளத்தை நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளார். அதோடு இவர் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் அடுத்த ரூர்கி எனும் பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்.