கலைமாமணி நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்
- IndiaGlitz, [Monday,January 20 2020]
பழபெரும் நடிகை கலைமாமணி நாஞ்சில் நளினி நேற்று காலமானார். 74 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னையை அடுத்த வேளச்சேரியில் காலமானார். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1968 இல் சிவாஜிகணேசன் நடித்த எங்கள் ஊர் ராஜா திரைப்படத்தின் மூலமாக சினமாவில் அறிமுகமானார். அண்ணன் ஓர் கோயில், தங்கப்பதக்கம், தீர்ப்பு என வெள்ளித் திரையில் 85 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நாடகங்களில் நடித்த சிறப்புக்குரிய இவர் வெள்ளித்திரையில் தற்போது வரைக்கும் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் இளம் நடிகர்களுடனும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தர்ம யுத்தம், ஆடுபுலி ஆட்டம், ரசிகன் ஒரு ரசிகை போன்ற படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சினிமா துறையில் 60 வருட அனுபவம் உண்டு என்பதும் சிறப்புக்குரியது.
மறைந்த கலைமாமணி நாஞ்சில் நளினியின் உடலுக்கு இன்று மதியம் மரியாதை செலுத்தப்பட்டு இறுதி காரியங்கள் நடத்தப்பட உள்ளது. இவரது இறப்பிற்குப் பல சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நடத்திரங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.