ஆஸ்கர் இறுதி பட்டியலில் இந்திய ஆவணப்படம்… கண்கலங்கிய பெண் இயக்குநர்!

94 ஆவது ஆஸ்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஆவணப்படம் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 20 விருதுகளைத் தட்டிச்சென்றிருக்கும் இந்த ஆவணப்படம் ஆஸ்கர் வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்கள் “கபர் லஹரியா” எனும் பத்திரிக்கையை நடத்தி வருகின்றனர். எந்தவித நெட்வொர்க் ஊடக வசதியும் இல்லாமல் அந்தப் பெண்கள் டிஜிட்டல் உலகத்தோடு போட்டிப்போடும் அசாதாரமான செயலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் “ரைட்டர் வித் ஃபயர்“ எனும் ஆவணப்படம். உண்மைச் சம்பவத்தைச் பேசும் இந்த ஆவணப்படத்தை ரின்டு தாமஸ்- சுஷ்மிதா கோஷ் என்ற இணையர் இயக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

5 வருட உழைப்பில் உருவான “ரைட்டர் வித் ஃபயர்” ஆவணப்படம் இதற்கு முன்பு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு ஸ்பெஷல் ஜுரி விருதையும் ஆடியன்ஸ் விருதையும் தட்டிச்சென்றுள்ளது. அதேபோல 100க்கும் மேற்பட்ட விழாக்களில் இதுவரை 20 விருதுகளை இந்த ஆவணப்படம் பெற்றிருக்கிறது.

விளம்புநிலையில் இருக்கும் பெண்கள் தங்களுக்கான அறிவை வைத்துக்கொண்டு டிஜிட்டல் உலகத்தோடு போட்டிப்போடும் உண்மை நிகழ்வை பேசியிருக்கும் ரைட்டர் வித் ஃபயர் ஆவணப்படம் தற்போது இந்தியர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து “ஸ்மைல் பிங்கி“, “பீரியட்“ போன்ற ஆவணப்படங்கள் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. ஆனாலும் அவை இந்தியத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்படவில்லை.

தற்போது ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் “ரைட்டர் வித் ஃபயர்“ ஆவணப்படம் எந்தவிதப் பெரிய பின்புலத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் சினிமா அனுபவமுள்ள எளிய மனிதர்களால் உருவாக்கப்பட்டு தற்போது இறுதிப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இந்தத் தகவலை ஊடகத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரின்டு தாமஸ் ஆனந்த கண்ணீர் வடித்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.