பாகிஸ்தான் கொடியுடன் பாடகி ரிஹானா? வைரல் புகைப்படத்தின் உண்மை நிலவரம் என்ன?

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

அமெரிக்க பாப் பாடகியும் பிரபல நடிகையுமான ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல வகைகளில் எதிர்ப்புகளும் கிளம்ப தொடங்கின. இந்நிலையில் ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் காட்சி அளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் அபிஷேக் மிஸ்ரா முதன் முதலாக இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாடகி ரிஹானா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது போன்ற தேடல்களும் கூகுளில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும் பாடகி ரிஹானா பாகிஸ்தான் ஆதரவுடன்தான் இந்தக் கருத்தை வெளியிட்டு இருக்கிறார் என்றும் சில நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2019 இல் உலகக்கோப்பை தொடரின் போது ரிஹானா மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஆதரவாக அந்நாட்டு கொடியை ஏந்தி இருந்தார். மேலும் அந்தப் புகைப்படத்தை ரிஹானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து யாரோ பாகிஸ்தான் கொடியை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.