பழிக்குப் பழி : ஆஸ்திரேலியாவுக்கு செக் வைக்கும் சீனா!!!

  • IndiaGlitz, [Thursday,June 11 2020]

 

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனா மீது குற்றம் சாட்டிய முதல் நாடு அமெரிக்கா. அதேநேரத்தில் உலகளவில் கொரோனா பரவல் குறித்து முறையான விசாரணை வேண்டும் என்று குரலை எழுப்பிய இன்னொரு நாடு ஆஸ்திரேலியா. உலக நாடுகள் மத்தியில் கொரோனா வைரஸ்க்கு முறையான விசாரணை வேண்டும் எனவும் உலகச் சுகாதார பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த முன்னெடுப்புத்தான் கடந்த மாதத்தில் நடந்த உலக சுகாதார அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் 120 நாடுகள் சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற அறிக்கையைத் தாக்கல் செய்தவற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து முறையான தகவலை உலக நாடுகளுக்கு அளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில் WHO சீனாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் சீனாவின் வுஹாண் மாகாணத்து வைராலஜி ஆயவகத்தில் இருந்து வெளியேறியதுதான் கொரோனா வைரஸ் என்ற கருத்தையும் வெளிப்படுத்தினார். அதோடு சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு வைரஸை பரப்பியது என்ற குற்றச் சாட்டையும் தொடர்ந்து முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முறையான விசாரணை வேண்டும் என்ற குரல் எழுப்பப்பட்டது. அதில் ஆஸ்திரேலியாவின் பங்கு மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனா ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் கை வைக்கும் அளவிற்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய நாட்டில் படிக்க செல்லும் சீன மாணவர்கள் அங்குள்ள அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்” என தற்போது சீனா எச்சரித்துள்ளது. மேலும் சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் “சீன சுற்றுலா பயணிகள் தங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல் நடப்பதாகவும் சீனாவின் வெளியுறவுத் துறை சுட்டிக் காட்டி இருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சீனாவின் அனைத்து துறைகளும் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்வதைக் குறித்து எச்சரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மெல்பேன் நகரில் 2 சீன மாணவர்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாதானவும் தனது அறிக்கையில் சீனா சுட்டி காட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்லாது சீனாவில் இருந்து ஆஸ்திரேலியா பொருட்களை இறக்குமதி செய்யும்போது செலுத்தப்படும் வரியையும் தற்போது சீனா அதிகப்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 50 விழுக்காடு பொருளாதாரம் சீனாவை நம்பித்தான் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆஸ்திரேலியாவில் படிக்கும் மற்ற நாட்டு மாணவர்களை விடவும் சீன மாணவர்கள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் சென்று படிப்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அங்கு இனவெறி தாக்குதல் நடத்தப் படுவதாகவும் அரசு சுட்டிக் காட்டுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 28% சீன மாணவர்கள் கல்வி பயின்றனர் என்பதும் குறிப்படத்தக்கது.

ஒருவேளை சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவை புறக்கணித்தால் ஆண்டிற்கு 12 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் எனவும் ICEF சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், சீன மாணவர்களை இனி ஆதரிக்காது எனவும் சீன மாணவர்களுக்கு விசா வழங்குவதை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் படித்துவரும் பல்லாயிரக்கணக்கான சீன மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சீனா வெளியிட்டுள்ள அறிவிப்புகளால் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கொரேனா வைரஸ் பரவல் விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது ஒரு நாட்டில் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் அளவிற்கு மாற்றியிருக்கிறது என்பதும் வருந்ததக்கது