அக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடப்பட வேண்டுமா? சுற்றுலாத்துறையின் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,April 09 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் எந்தவித ஆதாரமும் இன்றி வரும் வதந்தியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒருசிலர் உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அவ்வாறு வந்த வதந்திகளில் ஒன்று, அக்டோபர் 15-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள எந்த ஹோட்டலையும் திறக்க வேண்டாம் என சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பரவிய ஒரு வதந்தி தான். இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று ஏற்கனவே சுற்றுலாத்துறை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
21 நாட்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் கூட ஹோட்டல்கள் மூட வேண்டாம் என்றும் பார்சல் மட்டும் வழங்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அக்டோபர் 15 வரை உணவகங்கள் மூட வேண்டும் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல பொதுமக்கள் தயங்கி வருகிறார்கள். இந்த நிலையில் இதுபோன்ற வதந்திகள் ஹோட்டல்களின் வியாபாரத்தை மேலும் பாதிக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.