உபி-யில் சிகிச்சையில்லாமல் தவிக்கும் செய்தியாளர்...! உபி..அரசுக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்றம்...!
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
சிறையில் உள்ள செய்தியாளர் சித்திக் கப்பனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என உத்திரப்பிரதேச அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சார்ந்த செய்தியாளர் சித்திக் கப்பன் என்பவர் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து, தகவல்கள் சேகரிக்க சென்றபோது உத்திரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரின் மீது, சட்டவிரோத செயல் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு, தேசவிரோதச் செயல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு, கடந்த வருடம், செப்டம்பர் மாதம் கைதானார். பின்பு அக்டோபர்-5-இல் மதுராவிற்கு அழைத்துச்சென்ற சித்திக்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் UAPA- படி சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து இவரை விடுதலை செய்யவேண்டும் என கேரள பத்திரிகையாளர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கை தொடரச் செய்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உபி காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் சித்திக் சிறையில் இருக்கும் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கடந்த 20-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்குப்பின் 21-ஆம் தேதி இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட சித்திக் மருத்துவமனையில் விலங்குகளைப் போல் கட்டிவைக்கப்பட்டுள்ளதாகவும், 4 நாட்களாக உணவில்லாமலும், இயற்கை உபாதைகள் கழிக்க செல்ல முடியாத நிலையிலும் உள்ளார். இதனால் இவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, சித்திக்கின் மனைவி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதேபோல் கேரளப்பத்திரிக்கையாளர் சங்கமும் குற்றம் சாட்டியது. சித்திக்கின் மருத்துவ சிகிச்சை குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்-க்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே சித்திக் பற்றிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஏ.எஸ் போபண்ணா உள்ளிட்டோரின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததில், அவரின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென உபி அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதயநோய், நீரிழிவு நோயால் பாதிப்படைந்த இவர், கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு தற்போது மதுரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனையில் இருந்து, வேறு பக்கம் சிகிச்சைக்காக அவரை அனுமதிக்கவேண்டும் என சித்திக்கின் மனைவி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அம்மருத்துவமனையில் பிற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாது என உபி அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இன்றளவில் விசாரணைக்கு வந்த சித்திக் வழக்கில், சித்திக்கை டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது பிற மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.