விஜய்யுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகெயனின் 'ரெமோ'

  • IndiaGlitz, [Monday,August 15 2016]

சிவகார்த்திகேயன் முதன்முதலாக நர்ஸ் உள்பட பல வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ரெமோ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல முன்னணி விநியோகிஸ்தர்கள் 'ரெமோ' படத்தின் ரிலீஸ் உரிமையை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஒவ்வொரு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை வாங்கியவர் குறித்த தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்டாக அறிவித்த விநியோகிஸ்தர் 'ஷிபுதமீன்ஸ்

'ரெமோ' படத்தின் கேரள உரிமையை ஷிபுதமீன்ஸ் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'புலி' மற்றும் விக்ரம் நடித்த 'இருமுகன்' ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களின் படங்களை போலவே சிவகார்த்திகேயன் படங்களுக்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பதால் கேரளாவில் அதிக திரையரங்குகளில் இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் திரையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் இசைப்புயல் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.