கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்- மத்திய அரசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,September 28 2021]
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த நிதியை மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து துவங்கியது. இதனால் 4.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பல்வேறு சமூகநல அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. இந்த முடிவை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டதால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உடினடியாக நிவாரணம் வழங்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவத் தொடங்கிய நாளில் இருந்து மறுஅறிவிப்பு வரும்வரை இந்த திட்டம் தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.