முதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,August 12 2019]
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் ஆகியவைகளை அறிவித்துள்ளார்.
இவற்றில் ஒன்று திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகும் அதே நேரம் உங்கள் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் அதே திரைப்படத்தைப் பார்க்கலாம் என்பதுதான். இதை ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம் என்றும், இத்திட்டம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் முதல் நாள் முதல் காட்சிக்காக திரையரங்கம் செல்ல வேண்டிய நிலை இருக்காது. வீட்டில் இருந்தே மாஸ் நடிகர்களின் படங்களை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், தொடக்க நிலையில் 1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம் என அறிவித்த முகேஷ் அம்பானி, 'ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகை இருப்பதாகவும், மாதம் ரூ.700 விலையில் ஜியோ ஃபைபர் சேவை செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்படுகிறது என்றும், ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்றும், நொடிக்கு 100 எம்.பி இணையவேகத்தில் ஜியோ ஃபைபரின் அடிப்படை பிளான் இருப்பதாகவும், இது நொடிக்கு 1 ஜி.பி இனையவேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் கூறிய முகேஷ் அம்பானி, கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது எந்த இந்திய நிறுவனமும் எட்டமுடியாத இலக்காகும் என்றும் தெரிவித்தார்.