'ருத்ரம்மாதேவி' ரிலீஸ் உரிமையை பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம்
- IndiaGlitz, [Wednesday,September 16 2015]
பாகுபலி' படத்தை அடுத்து அனுஷ்கா மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று 'ருத்ரம்மாதேவி'. ராணி ருத்ரம்மாதேவியின் உண்மை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பாகுபலி'க்கு இணையான எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளின் தாமதம் காரணமாக ரிலீஸ் தேதிகள் ஒருசில முறை ஒத்திவைக்கப்பட்டபோதிலும், தற்போது வரும் அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பின் ரிலீஸ் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் கடைசிகட்ட கிராபிக்ஸ் பணிகள் கொச்சியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இரவுபகலாக நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் மிகவிரைவில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் 'புலி', அக்டோபர் 1ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், இந்த படம் அதற்கு அடுத்த வாரமே வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுமே சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் என்பதால் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சரித்திர விருந்துகள் காத்திருக்கின்றன.
அனுஷ்கா, அல்லு அர்ஜூ, ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், நித்யா மேனன், கேதரின் தெரசா, பிரம்மானந்தம், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் தயாரித்து இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.