கொரோனாவால் இறந்தவர் உடலை வாங்க மறுக்கும் உறவுகள்...! உதவிக்கரம் நீட்டும் இஸ்லாமிய அமைப்புகள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்ததால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடல்களை அடக்கம் செய்து வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுப்பதால், சாதி மத,பேதங்கள் இல்லாமல் இஸ்லாமிய அமைப்பினை சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்த 250-க்கும் அதிகமானோரின் உடல்களை இந்த அமைப்பினை சார்ந்தவர்கள், இறந்தவர்கள் மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர் அவர்களது மதத்தின்படி சடங்குகள் செய்துமுடித்தபின், அடக்கம் செய்யவருகிறார்கள். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக இதுவரை 75 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இம்முறையில் ஒரே ஆட்கள் வேளையில் ஈடுபடுத்தாமல், சுழற்சி முறையில் அமைப்பை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அரசின் வழிகாட்டுதலின்படியும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தியும் தான் இப்பணியை மேற்கொள்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் இது பற்றி கூறுகையில், 'சாதி, மதங்களை கடந்து, மனித நேயங்களை போதிக்கும் பொருட்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்கள் மதமுறைப்படியே நல்லடக்கம் செய்து வருகிறோம்' என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இதுகுறித்து பேசுகையில், 'கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்க மறுக்கிறார்கள்.எங்களை தொடர்பு கொண்டு அதற்கான பொருளாதார உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், ஆனால் அதைப்பெற்றுக்கொள்ளாமல் இதுவரை கோவையில் 50-க்கும் அதிகமானோரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்' எனக் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இதுகுறித்து கூறியதாவது, "கோவையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 138 பேரின் உடல்களை, அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளோம். வசதி இருக்கும் நபர்கள் பணம் தருகிறார்கள், வசதி இல்லாதவர்களிடம் நாங்களே பணம் கேட்பதில்லை. மேலும் வைரஸால் இறப்பவர்களின் இறுதி சடங்குகளை செய்ய தேவைப்படும் பொருட்களை தமிழக அரசு வழங்கினால் உதவியாக இருக்கும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குழி தோண்ட ஜே.சி.பி இயந்திரம், பிளிச்சிங் பவுடர், காடா துணி, பிபிஇ கிட் போன்றவை உடல்களை அடக்கம் செய்ய தேவைப்படுகிறது. இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கழகத்தின் தலைவர் முஜீபூர் ரகுமான் கூறியதாவது, " இதுவரை கோவையை கொரோனாவால் உயிரிழந்த 250-க்கும் அதிகமானோரின் சடலங்களை பாதுகாப்பு உபகரணங்களுடன், அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளோம். சாதி, மதங்களை கடந்து, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, இறைவனுக்கு செய்யும் பணியாக கருதுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments