இரட்டிப்பான நீட் தேர்வு கோச்சிங் சென்டர் பதிவுகள்… மருத்துவத் துறையில் அசத்தும் தமிழக முதல்வர்!!!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர சிறப்பு ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தைத் தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வந்தார். இத்திட்டத்தால் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர கூடுதலாக இடம் ஒதுக்கப்படும். அந்த வகையில் தமிழக அரசின் செயல் திட்டத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தற்போது தங்களது மருத்துவக் கனவை குறித்து நம்பிக்கை கொண்டி இருக்கின்றனர். எனவே நீட் தேர்வுக்காகப் பயிற்சி அளிக்கும் கோச்சிட் சென்டர்களில் தற்போது முன்பதிவு குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கும் சென்டர்களில் 8,132 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மட்டும் சேர்ந்து பயிற்சி பெற்றனர். ஆனால் தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள்இட ஒதுக்கீடு முறையால் தற்போது மருத்துவப் படிப்புக்கான ஆர்வம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக பயிற்சி பெற இதுவரை 16 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் வரை 9 ஆயிரத்தை மட்டுமே தொட்டு இருந்த கோச்சிங் சென்டர் பதிவுகள் தற்போது தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையால் கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது. மேலும் கோச்சிங் சென்டர்களில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தொடும் எனவும் பள்ளி கல்வி துறையை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கு தமிழக அரசு உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,612 மாணவர்கள் தேர்வினை எழுதினர். அதில் 747 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.