கொரோனோவுக்கு மத்தியஅரசு கொடுக்கவுள்ள சிவப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணங்கள்!!! என்ன வேறுபாடு !!!
- IndiaGlitz, [Monday,April 13 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு கடந்த மார்ச் 23 இரவு 12 மணிமுதல் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரி போன்ற அனைத்தும் முடக்கப்பட்டன. தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளை (ஏப்ரல் 14) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியா கொரோனா பாதிப்பில் 3 ஆம் கட்டத்தை எட்டிவிட்டதாக எனப் பலத்தரப்புகளில் இருந்தும் பீதியும் கிளப்பப்படுகிறது.
இந்நிலையில் ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் வரை தங்களது மாநிலங்களில் ஊரடங்கை நீடித்திருக்கின்றன. இதுதவிர, மற்ற மாநில அரசுகள் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை நீடிக்குமாறு தாங்களாகவே மத்தயஅரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் அமைப்புச்சாராத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் அவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய நெருக்கடி நிலைமையில் மத்திய அரசு கொரோனா பாதிப்பு அளவை பொறுத்து ஊரடங்கு உத்தரவு வரையறைகளை வகுக்க முடிவு செய்திருக்கிறது. முன்னதாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னரே மத்திய அரசு சில விதிமுறைகளை விதிக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒட்டுமொத்த இந்திய மாவட்டங்களையும் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணங்களாக பிரிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவப்பு – கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்படும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 க்கும் மேல் இருந்தாலே அந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தற்போது உள்ள விதிமுறைகளின்படி தொடரப்படவேண்டும். அத்யாவசியப்பொருட்களைத் தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்த இந்த சிவப்பு வண்ணம் கொடுக்கப்படுகிறது.
ஆரஞ்ச் – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 க்கும் கீழ் இருக்கும்பட்சத்தில் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுக்கப்படும். இந்த மாவட்டங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகள் இருப்பதாக கருதப்பட்டாலும் ஊரடங்கு சில விதிமுறைகளின் படி கடைபிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த அளவிலான போக்குவரத்து, வேளாண், மருந்து போன்ற பொருட்களுக்கான உற்பத்தியில் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பச்சை- கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்கள் பச்சை வண்ணப்பகுதிக்குள் அடக்கப்படும். இதுவரை இந்தியாவில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் போன்றவை சமூக விலகல் விதிகளுடன் அனுமதிக்கப்படும்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தவை தளர்த்துவது என்பதைக் குறித்து ஆலோசித்து வருகிறது. உணவு உற்பத்தி, விமானச் சேவை, மருந்து தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் போன்ற சில தேவைகளில் விதிகள் தளர்த்தப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்துவருகிறது. ஊரடங்கு உத்தரவில் அமைப்புச்சாராத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் நம்பிக்கை அளித்துள்ளது.