கொரோனாவை குணப்படுத்தும் எறும்பு? ஆய்வுக்கு பரிந்துரைக்கும் நீதிமன்றம்!!!
- IndiaGlitz, [Saturday,January 02 2021]
ஒடிசா, சடீஷ்கர் மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் பழங்காலம் தொட்டு ஒரு வகையான சிவப்பு எறும்பை உணவாக உட்கொண்டு வருகின்றனர். மரங்களில் வாழும் சிவப்பு எறும்புகளை அவர்கள் மிளகாயுடன் சேர்த்து அரைத்து உண்கின்றனர். அந்த சட்னி தற்போது கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப் படுகிறது. இந்நிலையில் உறுதிச் செய்யப்படாத இத்தகவலை ஆயுஷ் அமைச்சகம் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மலைக்காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் உணவு முறை பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்து இருக்கும். அந்த வகையில் ஒடிசா, சடீஷ்கர் காடுகளிலும் வசித்துவரும் சில இனக்குடி மக்கள் அங்குள்ள மரங்களில் வாழும் சிவப்பு எறும்புகளை மிளகாயுடன் சேர்த்து அரைத்து உண்கின்றனர். மேலும் இந்த சட்னி பலகாலமாக சளி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப் படுகிறது. அதில் புரோட்டீன், கால்சியம் போன்ற தாதுக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்திக்காக மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் சிவப்பு எறும்பு சட்னியை கொரோனாவிற்கு எதிராகப் பயன்படுத்தலாம் என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நயதர் பதியால் என்பவர் பரிந்துரைத்தார். மேலும் இதுகுறித்து ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து உள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுஷ் அமைச்சகம் சிவப்பு எறும்பு சட்னியைக் குறித்து விசாரணை செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பயன்பாடு குறித்த முதற்கட்ட சோதனையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தி இருக்கிறது. இந்தச் சோதனை ஓட்டத்தை அடுத்து முறையான தடுப்பூசி பொது மக்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் (சிவப்பு எறும்பு சட்னி) பழங்கால மருத்துவ முறை கொரோனாவிற்கு எதிராக பலன் அளிக்குமா என்ற சோதனையும் தொடங்கி உள்ளது.