கபாலி: சூப்பர்ஸ்டார் வேலிகளைக் கடந்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சூப்பர்ஸ்டார் என்ற ஒரு வார்த்தை போதும். அந்த வசீகரம், திரை ஆளுமை, மிடுக்கு, ஸ்டைல், ரசிகர்களால் கடவுளுக்கு இணையாக போற்றப்படும் நிலை ஆகியவை இந்த பூமியை அதிரவைக்கும். ஆனாலும் ரஜினிகாந்த் என்பது இவை மட்டும்தானா? அவரால் நன்றாக நடிக்கவே முடியாதா? நட்சத்திர அந்தஸ்தை வைத்து ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டப் பயன்படும் பொம்மையா? இல்லவே இல்லை. அடிப்படையில் ரஜினி ஒரு சிறந்த நடிகர். அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் மிகப் பிரம்மாண்டமாக நேற்று வெளியாகியிருக்கும் 'கபாலி'.

1980களின் சினிமா ரசிகர்கள், ரஜினி ஒரு இயக்குனரால மெருகேற்றப்படும் நடிகராக, இயக்கனரால் கையாளப்பட அனுமதிக்கும் நடிகராக இருந்தார் என்பதை அறிவர். இந்தப் படத்தில் ரஜினி, வழக்கமான ரஜினி அம்சங்களை ஒதுக்கிவிட்டு/குறைத்துக்கொண்டு இயக்குனர் சொன்னதைச் செய்து அதில் தன் முத்திரையையும் பதித்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியமான ஒன்றல்ல.

அனைவரும் பார்க்க வேண்டிய படம் கபாலி'அதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளக்குகிறோம்.

நடிகரான சூப்பர்ஸ்டார்

'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் என்ற நடிகர் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்வது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அவர் மாஸ் மசாலா படங்களில்தான் அதிகம் நடிக்கிறார் என்றாலும் அந்தப் படங்களிலும் அவர் நடிப்பை ரசிப்பதற்கான தருணங்கள் ஏராளமாக இருந்தன.

ஆனால் கபாலி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட நடிகர் ரஜினிதான் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறார். சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, சுருட்டு பற்றவைப்பது, ஒரே பார்வையில் எதிரியைக் கீழே விழவைப்பது, ஒரு அடியில் வில்லனைப் பறக்கவைப்பது, பஞ்ச் வசனங்களைப் பேசுவது மட்டும் ரஜினி அல்ல. அவர் இவற்றையும் செய்வார். இவற்றுக்கு நேரெதிரானவற்றையும் செய்வார் என்பதை நிரூபித்திருக்கும் படம் கபாலி.

இந்தப் படத்திலும் அவர் சொகுசான காரில் பயணிக்கிறார். அடியாட்கள் இருக்கிறார்கள், ஆனால் அவற்றோடு, அன்புக்காக ஏங்கும் மனிதனாக. மனைவியைப் பிரிந்து வாடும் கணவனாக நம் கண்களில் நீர் அரும்ப வைக்கிறார். சர்வ வல்லமை மிக்க தாதாவாக இருந்தாலும் தனது உறவுகளின் அன்புக்காக ஏங்கும் சக மனிதர்களையும் நேசிக்கும் சராசரி மனிதனாக நடித்திருக்கிறார் ரஜினி.

ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மற்றொரு கையால கண்ணீரைத் துடைக்கும் ரஜினி மிக மிகப் புதியவர்.

ரஞ்சித்தின் அரசியல் தெளிவு

'மெட்ராஸ்' படத்தில் வெளிப்பட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரசியல் புரிதலும் தெளிவான பார்வையும், வியக்க வைத்தன.

மலேசியத் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் விதம், அங்கே அவர்களது மோசமான வாழ்நிலை ஆகியவற்றை அழுத்தமாகக் காட்சிப்பத்துகிறது படம். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கான அரசியல் சார்ந்த பல வசனங்கள் கைதட்டல்களை அள்ளுவது இதுபோன்ற வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தமிழ் ரசிகர்கள் தயாராகிவிட்டதையும் காத்திருப்பதையும் காண்பிக்கின்றன.

ரஜினி அணிந்திருக்கும் கோட் சூட் உடைக்கு அம்பேத்கரின் பின்புலத்தைப் பொருத்தியது, நா முன்னேறி வரது உனக்கு புடிக்கலன்னா நா முன்னேறுவேன்டா' என்பதுபோன்ற வசனங்கள் சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என்று பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கான தீர்க்கமான குரலாக ஒலிக்கின்றன.

உணர்ச்சிகரமான காட்சிகள்

இயக்குனர் ரஞ்சித், உணர்ச்சிகரமான காட்சிகளைக் சிறப்பாகக் கையாள்ப்வர் என்பது மெட்ராஸ்' படத்தில் தெரிந்தது. அதில் நாயகன் காளியின் நண்பன் அன்பு இறக்கும் காட்சியும், அதைத் தொடரும் பாடலும் அதற்குப் பின் காளி நண்பனை இழந்த துக்கத்தில் வாழ்வில் பிடிப்பற்றுத் திரியும் காட்சிகளும் நம் மனதை உருக்கின. பலரது கண்களை ஈரமாக்கின. கபாலி' படத்திலும் இது போன்ற காட்சிகள் நிறையவே உள்ளன. குறிப்பாக பல ஆண்டுகளுக்குப் பின் கபாலி, தன் மனைவி உயிரோடு இருக்கிறார் என்று மகளிடமிருந்து தெரிந்துகொள்ளும் காட்சி. நீண்ட காத்திருப்புக்குப் பின் தன் மனைவியை சந்திக்கும் காட்சி ஆகியவற்றை பல ஆண்டுகளுக்கு அசைபோட்டு ரசிக்கலாம்.

ஆனந்தமும் ஆரவாரமும் கொண்ட நாயகன்

இந்தப் படத்தின் நாயகன் மக்களைப் பாதுகாக்கும் தலைவன் என்றாலும் ஆகாயத்தில் பறப்பவனோ சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்பவனோ அல்ல. மக்களோடு மக்களாக நிலத்தில் காலபதித்துப் புழங்குபவன். தனது அன்பான குடும்பத்தை இழந்துவிட்டுத் தவிப்பவன், தனது துன்பமிக்க கடந்த கால வாழ்க்கையை நினைத்து தனிமையில் உழல்பவன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி இதுபோன்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பதே பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவர் உச்ச நட்சத்திரம் மட்டும் அல்ல, ஒரு சிறந்த நடிகரும்தான் என்பதை நன்கு புரிந்துவைத்திருக்கும் ரசிகர்களுக்கு சுவையான விருந்தைப் படைக்கின்றன இந்தக் காட்சிகள். இத்தனை நிதானமான, அமைதியான ஆனால் தன் வலிமையையும் உறுதியையும் விட்டுக்கொடுக்காத ரஜினையைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!!!

குமுதவல்லியும் யோகியும்

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் அவரது படங்களில் அவர் மீதுதான் அனைவரது கவனமும் குவிந்திருக்கும். ஆனால் அவரது மாஸ் படங்கள் சிலவற்றில்கூட வலிமையான பெண் பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. சந்திரமுகி' கங்கா, 'படையப்பா' நீலாம்பரி ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

கபாலி படத்திலும் இரண்டு வலிமையான பெண் பாத்திரங்களாக கபாலியின் மனைவி குமதவல்லியும் மகள் யோகியும் அமைந்திருக்கிறார்கள். குமுதவல்லிக்கு படத்தில் வெகு சில காட்சிகள்தான். ஆனால் அந்தப் பாத்திரத்தின் வலிமை அதிகம். கபாலியின் வேகத்தைக் கட்டுப்பத்தி அவரை சீரமைப்பவராக, அவர் மீது அளவுகடந்த காதல் கொண்டவராக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்து அந்த கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ற நடிகையாக ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்திருக்கிறார் ரஞ்சித். பல ஆண்டுகளுக்குப் பின் கணவனை சந்திக்கும் காட்சியின் வெளிப்படுத்தும் முக பாவனைகளும் கண்ணீரும் சொல்லிவிடுகின்றன குமுதவல்லியாக நடிக்க ராதிகா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று.

அதே போல் யோகியாக நடித்திருக்கும் தன்ஷிகாவும் ஒரு துணிச்சலும் வீரமும் மிக்க பெண்ணாக அப்பா மீது அளவுகடந்த அன்புகொண்டவராக, அழகாக நடித்திருக்கிறார். ரஜினி படத்தில் பாய்கட் முடியுடன், படம் முழ்க்க ஜீன்ஸ் பேண்ட், டாட்டூ ஆகியவற்றுடன் வரும் பெண் பாத்திரத்தைப் பார்ப்பது அந்தப் பாத்திரம் வலுவுள்ளதாக இருப்பதும் அதில் நடித்தவர் சிறப்பாக நடித்திருப்பதும் மிகுந்த மனநிறைவை அளிப்பவை.

தன்ஷிகாவுக்கு இந்தப் படத்தில் ஒரு நாயக நடிகருக்குரிய சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. பொதுவாக தமிழ்ப் படங்களில் தாதாக்களின் விசுவாசமான அடியாளாக ஆண்கள் இருப்பார்கள். தாதாக்களிடம் இருக்கும் பெண்கள் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப் படுவார்கள். இந்தப் பின்புலத்தில் யோகி பாத்திரத்தின் முக்கியத்துவம் பெறுகிறது.

பொருத்தமான இசை

கபாலி படத்துக்கு பொருத்தமாக வணிக மதிப்புக்குத் தேவையான இரைச்சல்களை திணிக்காத இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் தனியாகக் கேட்க சிறப்பாக இருப்பதுபோல், படத்தில் தனித்துத் துறுத்தி நிற்காமல் திரைகக்தையுடன் அழகாக இணைந்து வருகின்றன. தேவையான இடத்தில் முழுப் பாடலாகவும் சில இடங்களில் மாண்டேஜ் பாடல்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மலேசியாவைப் பிரதிபலிக்கும் கலை இயக்கம் ஆகியவையும் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

கடைசியாக சில வரிகள்...

படத்துக்கு பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்தது. விளம்பரங்கள் இதுவரை இல்லாத அளவு அதிகமாக இருந்தன. சூப்பர் ஸ்டார் படம் என்றால் சில விஷயங்கள் இருந்தே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் விஷயங்களைவிட ரஜினி என்ற நடிகனின் வேறு சில பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கும் படம் என்று அணுகினால் இந்தப் படத்தை நீங்களும் ரசிப்பீர்கள், என்றும் ரசிப்பீர்கள்.

More News

காரணமில்லாமல் இந்த புகழ் வருமா? ரஜினி குறித்து கமலுக்கு நெருக்கமானவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தொழில் முறையில் வேண்டுமானால் போட்டியாளர்களாக இருக்கலாம்.

விஜய், ரஜினி, மீண்டும் விஜய். தாணுவின் புதிய கணக்கு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற படத்தை தயாரித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற பிரமாண்டமான படத்தை தயாரித்து நாளை வெளியிடவுள்ளார். தெறி ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட் என்பது தெரிந்ததே.

கபாலி': முதல் நாள் மற்றும் வார இறுதியில் எதிர்பார்க்கப்படும் உத்தேச வசூல்

நாளை சூரியன் உதிக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் காட்சி முடிந்திருக்கும்.

சிம்புவின் 'AAA'வில் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய் பட நடிகர்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தல 57' படத்தில் வில்லனா? சசிகுமார் விளக்கம்

அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு தேவையான ஆயத்த பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர்.